முத்துப்பேட்டையில் சமூக விரோதிகளின் புகலிடமான வேளாண். விரிவாக்க மைய கட்டிடம்

முத்துப்பேட்டை, ஏப். 26: முத்துப்பேட்டையில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவரும் வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் விரிவாக்க அலுவலகம் செயல்பட்டு வந்தது. இருந்தும் இங்கு போதிய இடம் போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கடந்த ஆண்டு முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டிடம்  கட்டும் பணிகள் நடந்து சமீபத்தில் முடிந்தது. இருந்தும் சென்றாண்டு சிறுசிறு வேலைகளை நிறைவு பெறாமல் அதனை அதிகாரிகள் திறக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனை சுட்டிக்காட்டி சென்றாண்டு ஜூலை 10ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது.

இதனையடுத்து கடந்த ஜூலை 25ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அன்று திறக்கப்பட்ட கட்டிடத்தை இதுநாள்வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. புதிய கட்டிடத்தை சுற்றி சுவர்கள் ஏதும் இல்லாமல் திறந்த நிலையில் கிடப்பதால் போதிய பாதுகாப்பு இல்லாமல் கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் இரவில் சமூக விரோதிகள் கூடும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி வருகிறது. எனவே இந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: