மந்தாரக்குப்பம் அருகே குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

நெய்வேலி, ஏப். 25: நெய்வேலி மந்தாரக்குப்பம் அடுத்த தெற்கு வெள்ளூர் ஊராட்சி கடலூரிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த ஊராட்சியில் குப்பை தொட்டியில் உள்ள  குப்பைகள் தொட்டி முழுவதும் கொட்டப்பட்டும் அகற்றப்படாமல் உள்ளதால் குப்பை தேங்கி கிடக்கிறது. துப்புரவு ஊழியர்கள் இந்த குப்பைகளை முறையாக அகற்றாததால் நாள் கணக்கில் கிடந்து துர்நாற்றம் வீசுகின்றது.

இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் என இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  தெற்கு வெள்ளூர் பேருந்து நிலையம் எதிரே இருப்பதால் தினந்தோறும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு சாலையை கடந்து சென்று வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரையில் ஊராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: