2 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்றோம் கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்

 

பண்ருட்டி, மே 28: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (75). இவரது கணவர் சாரங்கபாணி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், பெரியகாட்டு பாளையத்தில் லட்சுமி தனியாக வசித்து வந்தார். இவர்களது மகள் இந்திராணி நடுக்காட்டு பாளையம் கிராமத்தில் கணவர் சாரங்கனுடன் வசித்து வருகிறார். கடந்த 25ம் தேதி லட்சுமி நெற்றியில் காயம் ஏற்பட்டு வீட்டில் இறந்து கிடந்தார்.

இது குறித்து இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (20), மேலிருப்பை சேர்ந்த ஐயப்பன் (26) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரனை நடத்தி வந்தனர். வாக்கு மூலத்தில் அவர்கள் கூறியதாவது: நாங்கள் இருவரும் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள மூதாட்டி லட்சுமி வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார் என்பதை அறிந்து அந்த வீட்டில் புகுந்து திருடலாம் என்று திட்டம் போட்டோம். சம்பவத்தன்று மூதாட்டி வீட்டிற்குள் சென்ற போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பொருட்களை திருடலாம் என நினைத்தோம். கிருஷ்ணகுமார் அதெல்லாம் வேண்டாம் என்று கூறினான்.

உடனே பாட்டியின் கழுத்தை நெரித்து உருட்டு கட்டை, இரும்பு பைபால் மண்டையில் ஓங்கி அடித்து கொலை செய்துவிட்டு, பிறகு அவர் காதில் இருந்த நகையை திருடி கொண்டு தப்பி விட்டோம். பின்னர் இதிலிருந்து தப்பி விடுவோம் என்று நினைத்தோம், ஆனால் மேலிருப்பு வெள்ளாத்து பாலம் அருகில் பதுங்கியிருந்த எங்களை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

The post 2 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்றோம் கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: