உடுமலையில் இன்று மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உடுமலை, ஏப்.25: உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று(25ம் தேதி) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா 9ம்தேதி துவங்கியது. தொடர்ந்து 16ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 18ம் மதியம் 12 மணி அளவில் கோயிலில் கொடியேற்றப்பட்டது. அன்றிரவு 12 மணி அளவில் வாஸ்து சாந்தி,கிராம சாந்தி பூஜை நடைபெற்றது.கடந்த 19ம் தேதி  பூவோடு துவங்கியது.இதையடுத்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் பூவோடு ஏந்தி கோயிலுக்கு வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். நேற்றுமுன்தினம் இரவுடன் பூவோடு ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு  மாவிளக்கு ஊர்வலம் துவங்கியது. தேர்த்திருவிழாவையொட்டி 19ம் தேதி இரவு காமதேனு வாகனத்திலும்,20ம் தேதி யானை வாகனத்திலும், 21ம் தேதி ரிஷப வாகனத்திலும், 22ம் தேதி அன்ன வாகனத்திலும், 23ம் தேதி சிம்ம வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 நேற்று மாலை 4 மணி அளவில் கோயில் வளாகத்தில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பபு அலங்காரத்தில் சூரத்தேவர்- மாரியம்மனுக்கு நடைபெற்ற திருமணத்தை ஏராளமான பெண் பக்தர்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அம்மன் மயில்வாகனத்தில் திருவீதி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(25ம்தேதி) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. திருவிழாவில் கலெக்டர் பழனிச்சாமி, பரம்பரை அறங்காவலர்கள் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், யு.எஸ். சஞ்சீவ் சுந்தரம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம்(கோவை) உதவி ஆணையர் ஹர்சினி(திருப்பூர்), மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார்,  உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், மாவட்ட வன அலுவலர் திலீப், உடுமலை டிஎஸ்பி ஜெயசந்திரன், தாசில்தார் தங்கவேல், நகராட்சி ஆணையர் ராஜாமணி, உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் யுஎஸ்எஸ் ஸ்ரீதர் மற்றும் செயல் அலுவலர் சந்திரமதி செய்து வருகின்றனர்.

Related Stories: