கங்கைகொண்டானில் தொடர்ச்சியாக மர்மமாக இறக்கும் மான்கள்

தாழையூத்து, ஏப். 25: கங்கைகொண்டானில் தொடர்ச்சியாக மான்கள் மர்மமான முறையில் இறப்பது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெல்லை அருகே கங்கைகொண்டானில் தமிழக அரசின் சார்பில் இயங்கிவரும் மான்கள் பூங்காவில் புள்ளிமான், கடமான், மிளா மற்றும் மயில், முயல்கள் என பாதுகாக்கப்பட்ட ஏராளமான உயிரினங்கள் உள்ளன. இருப்பினும் வேலி மற்றும் சுற்றுச்சுவர்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. அத்துடன் மான்களுக்கான இரை மற்றும் தண்ணீர் பூங்காவினுள்  சரிவரகிடைப்பதில்லை. இதனால் இரை மற்றும் தண்ணீர் தேடி பூங்காவில் இருந்து வெளியேறும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும், நாய்களால் வேட்டையாடப்பட்டும் இறப்பது தொடர்கதையாகிறது. மேலும், வேட்டை நாய்களிடம் இருந்து தப்பும்பொருட்டு ஓடும்போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பதும் தொடர்கிறது.

அந்தவகையில் தற்போது கங்கைகொண்டான் அடுத்த புங்கனூர் பகுதியில் இரண்டு மான்கள் மர்மமான முறையில் நேற்று இறந்துக் கிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், உடல்களை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதே பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னரும் மான்கள் இதே போல மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. மான்கள் இறந்த அதே நாளில் புங்கனூரை சேர்ந்த மிக்கேல் என்பவரது 5 ஆடுகளும் இறந்தது அங்குள்ள மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வயல் வெளிகளில் ஆடு மற்றும் மான்களினால் ஏற்படும் அழிவுகளை தடுக்க சில இடங்களில் புல் மற்றும் நாற்றுகளின் மீது விஷம் தெளித்து வருவதாகவும், இதனுடைய பாதிப்பினால் ஆடுகள் மற்றும் மான்கள் இறந்திருக்கலாம். எனவே, இனியாவது  தொடர்ச்சியாக மான்கள் பலியாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ளது’’ என்றனர். இதை போல், துள்ளிக் குதித்து ஓடும் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: