மண்ணச்சநல்லூர் பகுதியில் தண்ணீரின்றி கருகும் வாழை விவசாயிகள் கவலை

மண்ணச்சநல்லூர், ஏப்.25:   மண்ணச்சநல்லூர் பகுதியில் தண்ணீரின்றி வாழைகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 மண்ணச்சநல்லூரில் டெல்டா பகுதியை ஒட்டியுள்ள கிளியநல்லூர், சென்னகரை, பாச்சூர், அழகியமணவாளம், கோவத்தகுடி, ஊந்தங்குடி, மண்ணச்சநல்லூர், கூத்தூர், திருவளர்சோலை உள்ளிட்ட சில பகுதிகளில் 2,500 ஏக்கர் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்று அடித்ததில் பல ஏக்கர் வாழை மடிந்தன. மேலும் தண்ணீர் இல்லாமல் கருகும் வாழையால் விவசாயிகள் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 மண்ணச்சநல்லூர் பகுதியில் பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தன் பழம் ஆகிய வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயி அனந்தராமன் கூறுகையில், வாழையில் பல ரகம் உண்டு. எந்த வாழை எடுத்துக்கொண்டாலும் ஏக்கருக்கு பயிரிடும் செலவு ரூ.65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை ஆகும். இதனை முறையாக பராமரித்தால் நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு ரூ.1.75 லட்சம் வருமானம் கிடைக்க பெறும். ஆனால் இந்த ஆண்டு நமது டெல்டா பகுதியான மண்ணச்சநல்லூர் பகுதியில் போதிய  தண்ணீர் இல்லாத காரணத்தால் வாழை விவசாயின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது.  தற்போது கோடை மழை பெய்தால் வாழைக்கும், வாழை விவசாயிக்கும் வாழ்வுண்டு. இல்லை என்றால் விவசாயின் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்றார். எனவே வருண பகவான்தான் கண் திறக்க வேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் தெரிவித்தனர்.

Related Stories: