திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் போராட்டம்

திருவண்ணாமலை, ஏப்.25: திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவன செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் 3வது தெருவில், காலி வீட்டுமனையில் தனியார் நிறுவனத்துக்கான செல்போன் டவர் அமைக்கும் பணி நேற்று நடந்தது. அதையொட்டி, தனியார் நிறுவன ஊழியர்கள், செல்போன் டவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு திரண்ட அந்த பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், முறையான அனுமதி பெற்று டவர் அமைப்பதாக தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பை மீறி டவர் அமைத்தால், சாைல மறியல் செய்வோம் என மிரட்டினர். செல்போன் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

Related Stories: