விருதுநகர் மெயின்பஜாரில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

விருதுநகர், ஏப். 24: விருதுநகர் மெயின்பஜார் வழியாக, இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்து கோவில் திருவிழாவிற்காக நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியதால், இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. விருதுநகரில் மெயின்பஜார் தேசிய நெடுஞ்சாலையாக தற்போது வரை உள்ளது. இந்த பஜாரில் ஆக்கிரமிப்பு அதிகமானதால், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நகருக்கு வெளியே சாலை அமைத்தது. இதனால், நீண்ட தூர பஸ்கள் விருதுநகரை புறக்கணித்து செல்கின்றன. விருதுநகர் பயணிகளை ஏற்ற மறுக்கும் அவலநிலை தொடர்கிறது. இதனிடையே, நகரில் நடுவில் செல்லும் 60 அடி அகல தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் 30 அடிக்கும் குறைவாக உள்ளது. பஜார் இயங்கும் நேரத்தில் கடைகளுக்கு வரும் வாகனங்கள், தள்ளுவண்டிகளை நிறுத்துவதால், சாலையின் அகலம் 15 அடிக்கும் குறைவாக மாறுகிறது.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலைபோக்குவரத்து குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த பிப்.மாதம் மெயின் பஜார் வழியாக சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி பஸ்கள் இயக்கப்பட்டன. மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பஸ் போக்குவரத்தை மாற்றம் செய்ய கோரிக்கை விடப்பட்டது. அதைதொடர்ந்து பஸ்கள் பழைய டிடிகே ரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்டன. பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. இந்நிலையில் நேற்று முதல் பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. நேற்று காலை பஸ்கள் சென்றபோது இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து போலீசாரால் அகற்றப்பட்டன. இதனால், மெயின்பஜார் சாலை அகலமாகியது.

Related Stories: