இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை தண்டராம்பட்டில் புளிய மரங்கள் சாய்ந்தது

திருவண்ணாமலை, ஏப்.23: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. தண்டராம்பட்டில் புளிய மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடந்த மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். நேற்று 103 டிகிரியை வெயில் தொட்டது. ஆனால், காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது வெயில் அடித்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு, இடி மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் இந்த மழை நீடித்தது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும், மழையின் போது பலத்த காற்று வீசியது. இதனால், நகரின் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. செய்யாறு: செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மதியம் சுமார் 2.30 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில், வாகன ஓட்டிகள் சிரமப்பட்ட தோடு பல்வேறு கடைகளின் விளம்பர பேனர்கள் தட்டிகள் போர்டுகள் காற்றில் பறந்தன. இதனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. காற்றுடன் மழை பெய்தது.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுமார் பலத்த சூறாவளி காற்று, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் தண்டராம்பட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் ராதாபுரம் என்னும் இடத்தில் 3 புளியமரம் சாய்ந்தது. இதனால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய், நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சாலை கிடந்த புளியமரத்தை அகற்றினர். இதேபோல் பலத்த மழையால் அல்லப்பனூர் கிராமத்தில் உள்ள கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்த 128 கோழிகள் பலத்த மழையால் இறந்தது. இந்த திடீர் மழையால் திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: