அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை கண்டித்து ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை திருச்சுழி அருகே சாலை மறியல்

திருச்சுழி/சிவகாசி, ஏப். 23: ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாக பேசி, ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள ஆணையூர், லட்சுமியாபுரம், பாறைப்பட்டி, அய்யம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த சமூக மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நாட்டாண்மை முருகன் தலைமையில், ஊர்வலமாக வந்து, தங்களது சமூகம் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிவகாசி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகையின்போது, ‘தங்கள் சமூகத்தை இழிவாக பேசியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். சாதி மோதலை தூண்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோஷமிட்டனர். பின்னர் 10க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருச்சுழி:  திருச்சுழி அருகே உள்ள கு.புதூர் விலக்கில் சொக்கம்பட்டி, பனிக்குறிப்பு, முருகையாபுரம், கு.புதூர், கல்லாம்பிரம்பு ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சமூகம் குறித்து அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி திருச்சுழி-காரியாபட்டி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள், தங்கள் சமுதாய பெண்களை அவதூறாக பேசிய இருவரை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் திருச்சுழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, சமூக மக்கள் ‘மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: