நிபந்தனையின்றி நிரந்தர பணி வழங்ககோரி முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் முடிவு

தஞ்சை, ஏப். 22: தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஏஐடியூசி கொள்முதல் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் புண்ணீஸ்வரன், இணை பொது செயலாளர் குணசேகரன் பேசினர். கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் பல நாட்கள் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் இழப்புக்கு கொள்முதல் பணியாளர்களிடம் வசூல் செய்வதை கைவிட வேண்டும். நிர்வாகம் இருப்பு இழப்பு அனுமதிக்க வேண்டும். நிரந்தரப்படுத்தப்பட்ட பணியாளர்களுக்கு எடை குறைவை காரணம் காட்டாமல் நிபந்தனையின்றி நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல அலுவலகம் முன் வரும் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மே 7ம் தேதி சென்னை தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர் பாலையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

   

Related Stories: