அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வாகன நெரிசலில் தத்தளிக்கும் ஊட்டி

ஊட்டி, ஏப் 21: பெரும்பாலான பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வார விடுமுறை, மகாவீர் ஜெயந்தி, தேர்தல் வாக்குப்பதிவு பொது விடுமுறை, புனித வெள்ளி என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் கிடைத்த நிலையில் நேற்று முன் தினம் முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ளனர். கூடலூர் - ஊட்டி சாலையில் கேரள வாகனங்கள் அணி வகுத்து வந்தன. குறிப்பாக, பிற்பகலுக்கு மேல் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்துவங்கினர். இதனால், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள லாட்ஜ், காட்டேஜ் ஆகியவைகள் நிரம்பி வழிந்தன. நேற்று அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா, ஊட்டி, பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. ஊட்டி படகு இல்லத்தில் வெகு நேரம் காத்திருந்தே சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வந்த நிலையில் நேற்று நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.  தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து டி.பி.ஓ., சந்திப்பு வழியாக தாவரவியல் பூங்காவிற்கு மாற்றி விடப்பட்டனர். எனினும், அதிக வாகனத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ முதல் ஊட்டி வரை சுமார் 3 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றது. அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணறினர்.

குன்னூரில் இருந்து ஊட்டி நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் லவ்டேல் சந்திப்பு வழியாக மஞ்சனக்கொரை, பெர்ன்ஹில் வழியாக திருப்பி விடப்பட்டது. எனினும், வாகன நெரிசல் கட்டுப்படுத்த முடியவில்லை.

 அதேபோல், தொட்டபெட்டா செல்லும் சாலையிலும் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால், போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மிகவும் சிரமப்பட்டனர். நகரில் போதிய பார்க்கிங் இன்றி வானங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால், அனைத்து சாலைகளுமே வாகன நெரிசலில் தத்தளித்தது. குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளன. ஆனால் போக்குவரத்து சீரமைக்கப்படாமல் இருப்பதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட எஸ்.பி. முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: