நெல்லை மாவட்ட தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

நெல்லை, ஏப். 21; பாளை தூய சவேரியார் பேராலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் நேற்றிரவு ஈஸ்டர் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

 இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் துவங்கும் புதன்கிழமையன்று குருத்தோலை சாம்பல் நெற்றியில் பூசப்படுவதால் அந்நாளை சாம்பல் புதன் என்று அழைக்கின்றனர். இந்தாண்டு கடந்த மார்ச் 6ம் தேதி சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது. இதையொட்டி ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பை கிறிஸ்தவர்கள் கடைபிடித்தனர். கடந்த 14ம் தேதி குருத்தோலை ஞாயிறும், கடந்த 18ம் தேதி பெரிய வியாழனும் அனுசரிக்கப்பட்டது. இயேசு தனது சீடர்களின் கால்களை கழுவியதை நினைவுகூறும் வகையில், கத்தோலிக்க ஆலயங்களில் ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள், சபையின் மூப்பர்களது பாதங்களை கழுவும் நிகழ்ச்சியும், கடந்த 19ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் மும்மணி நேர சிறப்பு ஆராதனையும் நடந்தது. இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுதலின் சிறப்பை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. பாளை தூய சவேரியார் பேராலயத்தில் இதையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவ மக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர். இதே போல் அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: