திருச்சி அரசு மருத்துவமனையில் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின் சவகிடங்கிற்கு வெளியே வைத்து கேட்டை பூட்டிய கொடூரம் விபத்தில் இறந்த உண்மை தகவலை பதிய கோரி உறவினர்கள் தர்ணா

திருச்சி, ஏப். 19: திருச்சி பெரிய மிளகுபாறையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஹரிகரன் (27). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15ம் தேதி இரவு குடும்பத்துடன் சமயபுரம் கோயிலுக்கு செல்வதற்காக மினிடோர் வேனில் 7 பேருடன் சென்றனர். வேன்  இரவு 1 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் முன்னதாக வேங்குடி அருகே சென்ற போது வேனிற்கு முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நின்றது. பின்னால் சென்ற மினிடோர் டிரைவர் பசுபதி என்பவர் பிரேக் அடித்து நிறுத்தினார்.

Advertising
Advertising

 தொடர்ந்து கார் டிரைவரிடம் சென்று ஏன் இப்படி திடீரென பிரேக் போட்டு நிறுத்தினாய் என கேட்டார். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் மினிடோரில் இருந்து இறங்கிய ஹரிகரன், வேன் அருகே நின்று கொண்டு அதில் அமர்ந்திருந்த உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த டாரஸ் லாரி, நின்றிருந்து மினிடோர் வேன் மற்றும் ஹரிகரன் மீது மோதியது. இதில் ஹரிகரன் பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் 17ம்தேதி இரவு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த ஹரிகரன் நேற்று அதிகாலை  இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி பிரேத பரிசோதனை நடத்த ஆவணங்கள் தயார் செய்தனர். இதில் ஹரிகரண் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்க தயாரானது. அப்போது எப்ஐஆரில் மினிடோர் வேன் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த பெற்றோர், உடலை வாங்க மறுத்தனர். ஆனாலும் பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் மற்றும் ஊழியர்கள், தந்தை கோவிந்தராஜை மிரட்டி கையெழுத்து பெற்றனர். தொடர்ந்து ஹரிகரன் உடலை சவக்கிடங்கிற்கு வெளியே வைத்து விட்டு இரும்பு கேட்டை இழுத்து பூட்டி சென்றனர். இதனால் செய்வதறியாது திகைக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் சவக்கிடங்கு முன் அமர்ந்து ஹரிகரன் உடலுடன் மினிடோர் வேன் நின்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக எப்ஐஆரில் மாற்றி தரும்படி கூறி தர்ணா போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த எஸ்ஐ அழகர் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் ஒரு புகார் அளித்தால் மாற்று எப்ஐஆர் போட்டு கொடுப்பார்கள் என கூறியதை ஏற்று 2 மணி நேரம் கழித்து உடலை பெற்று சென்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மனசாட்சி இல்லாத டாக்டர்கள், போலீசார் படிப்பறிவில்லாத ஹரிகரன் பெற்றோரிடம் உடலை பெற்றுக்கொள்ளுமாறு கையெழுத்திட்டு பெற்ற டாக்டர்கள், உடலை வெளியே வைத்து இரும்பு கேட்டை இழுத்து பூட்டி சென்றனர். மேலும் சமயபுரம் போலீசார், மினிடோர் டிரைவரிடம் மிரட்டி வேன் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறி கையெழுத்து பெற்றனர். அரசு பணியில் உள்ளவர்கள் சாமானியர்களிடம் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்ட இச்சம்பவம் மருத்துவமனையில் கூடி இருந்தவர்களை வேதனையடைய செய்தது.

Related Stories: