காங்.- திமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்

வில்லியனூர், ஏப். 19: தமிழகம், புதுவையில் காங்., திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறினார்.புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தனது மனைவியுடன் வி.மணவெளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கை பதிவு செய்தார். முன்னதாக அவர், புதுச்சேரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக, ஆர்வமாக வாக்களித்துள்ளனர். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதற்கு இது அறிகுறி. புதுவை மக்கள் இந்திய அளவில் மாற்றம் வர வேண்டும், ராகுல் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியா முழுவதும் மோடிக்கு எதிர்ப்பான வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். புதுவை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளது. தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன், அதிக வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றியை பெறுவார். தட்டாஞ்சாவடியில் ஆளுங்கட்சி அரவணைப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காக வெங்கடேசனுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. 2 தேர்தலிலும் காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார். திமுக காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கான கூட்டணி. நாட்டின் வளர்ச்சிக்கான கூட்டணி. மக்களின் எண்ணங்களை, லட்சியங்களை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம். தேர்தல் முடிந்தவுடன் பாஜக இல்லாமல் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: