நீலகிரி தொகுதிக்கு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்

ஊட்டி, மார்ச் 28:   நீலகிரி மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஊட்டி, குன்னூர் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது.

   நீலகிரி தொகுதியில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 684 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், கட்டுபாட்டு இயந்திரங்கள், வாக்களிப்பு சரிபார்ப்பு இயந்திரங்கள் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டு ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.   இந்நிலையில் நீலகிரி தொகுதியில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குபதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து தொகுதி வாரியாக வாக்குபதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மக்களவை தொகுதியில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 1699 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், 912 கட்டுபாட்டு இயந்திரங்களும், 914 வி.வி.,பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை போதுமான அளவு உள்ளது. முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் இன்று (நேற்று) துவங்கியுள்ளது. ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும், என்றார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை குன்னூர், மார்ச் 28: தற்போதைய ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குன்னூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

 நீலகிரி மக்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து குன்னூரில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். குன்னூர் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் எங்கு சென்றாலும் மோடி எதிர்ப்பு அலை வீசி வருகிறது. பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. மேலும் சினிமாவில் வரும் எதிரியை போல மோடியும், எதிரியிடம் எப்போதும் இருக்கும் கைக்கூலி போல ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் செயல்பட்டு வருகின்றனர்.

 தற்போதைய ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. பொள்ளாச்சியில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு ஆளும்கட்சி பிரமுகரின் மகன் தனது காரில் மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து அந்த மாணவி தூக்கி வீசப்பட்டு இறந்துள்ளார். இதனை விபத்து என்று மூடி மறைத்து விட்டனர். தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவாக செயல்படுவதை பொது மக்கள் கண்கூட பார்த்து வருகின்றனர். ஏப்.18ம் தேதி நடக்க உள்ள மக்களவை தேர்தலில் திமுக., கூட்டணிக்கு நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும். தலைவர் ஸ்டாலின் அறிவித்த படி தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் காஸ் விலை, பெட்ரோல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் நீட் தேர்வு ரத்து, விவசாய கடன், கல்வி கடன் ஆகியவை ரத்து செய்யப்படும். ஊட்டியில் செயல்பட்டுவந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை உள்ள பகுதியில் மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைத்துதரப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். நேற்று பிற்பகல் 12 மணிக்கு ஊட்டிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவருக்கு நீலகிரி திமுக., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: புதிய இந்தியா பிறக்கும் என மோடி தெரிவித்தார். ஆனால் இந்திய மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கருப்பு பணம் ஒழிப்பேன் என தெரிவித்தார். ஆனால், இதுவரை கருப்பு பணம் மீட்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றார். ஆனால், புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய ராணுவ வீரர்களுக்கே மோடியால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. இவர் எப்படி பயங்கரவாதிகளை ஒழிக்க போகிறார். மேலும் ஜிஎஸ்டி., வரி விதிப்பு மூலம் நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள், வணிகர்கள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories: