மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கு வந்தன

உடுமலை,  மார்ச்26: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம்தேதி நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முதல்கட்டமாக,  திருப்பூர் மற்றும் பல்லடத்தில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக  வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவங்கி உள்ளது. அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் பழனிசாமி நேற்று முன்தினம் அனுப்பி  வைத்தார்.

 திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த  தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்,  வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரமான விவிபேட் ஆகியவை அனுப்பி  வைக்கப்பட்டன. உடுமலை சட்டமன்ற தொகுதியில் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன.  இதற்கான 352 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 352 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,  363 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல்,  மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்கான  342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 342 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 354  விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸ்  பாதுகாப்புடன் உதவிதேர்தல் அலுவலர்கள் லாரிகளில் இதை கொண்டு சென்றனர். இவை  நேற்று தொகுதிகளுக்கு வந்து சேர்ந்தன. உடுமலை தொகுதிக்கான வாக்குப்பதிவு  இயந்திரங்கள் உடுமலை அரசு கலைக்கல்லூரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கான  வாக்குப்பதிவு இயந்திரங்கள் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்  பாதுகாப்பான அறைகளில் வைத்து பூட்டப்பட்டன. அங்கு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது

Related Stories: