தேனி மாவட்டத்தில் குடியிருக்கும் வாக்காளர்களின் பட்டியலை கணக்கெடுக்கும் கேரள கட்சிகள்

தேவாரம், மார்ச் 22: தேனி மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகள் அதிகம் உள்ளநிலையில் கேரளா அரசியல்கட்சியினர் இதனை கணக்கெடுத்து வருகின்றனர். கேரளாவிலும், தமிழகத்திலும் ஏப்.18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. தேனி மாவட்டமும், இடுக்கிமாவட்டமும் மிக அருகாமையில் அமைந்துள்ளது. குமுளி, தூக்குப்பாலம், மாலி, சப்பாத்து, உடுப்பஞ்சோலை உள்ளிட்ட கேரளாவின் முக்கிய ஊர்களில் தமிழர்களின் ஏலத்தோட்டங்கள் உள்ளன. இங்கு விளையும் ஏலக்காய் கேரளா மாநிலத்தின் முக்கிய வருமானமாக உள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், மேலசிந்தலைசேரி, லட்சுமிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம், கூடலூர், கே.கே.பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த அதிகமான தமிழர்கள் கேரளா வாசிகளாக மாறி அங்கேயே குடியிருக்கின்றனர். இவர்களுக்கு கேரளா அரசின் ரேஷன்கார்டு, வாக்குரிமை உள்ளன. இவர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு தமிழகத்திலும் வாக்குகள் உள்ளன. இதனை நீக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்தாலும் இவை சாத்தியப்படுமா என தெரியவில்லை. இதனிடையே கேரளாவில் அரசியல்களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யார், யாருக்கு கேரளாவில் வாக்குரிமை உள்ளது என்ற பட்டியலை எடுத்து வருகின்றனர். பெரும்பாலும் கேரளாவில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக தொழிற்சங்கங்களில் இவர்கள் உள்ளதால் தங்களுக்கு சாதகமான வாக்குகளாக பார்த்து பட்டியலிடும் பணியும் நடக்கிறது. இதுகுறித்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், `` தமிழக, கேரளா மாநில தேர்தல் ஒரே நாளில் நடப்பதால் கேரளாவை பூர்விகமாக கொண்டு வாழக்கூடிய தமிழர்களின் வாக்குகளை பட்டியலிட்டு தேர்தல் நாளில் தங்களுக்கு சாதகமாக திருப்பிகொள்வதில் சில அரசியல் கட்சிகள் ஈடுபடதொடங்கி உள்ளன. தேர்தல் நாளில் இவைகளில் எத்தனை பேர் வாக்களித்தனர் என்பது பற்றி அரசியல்கட்சியினர் திருப்தி அடைவர் ‘’ என்றனர்.

Related Stories: