பர்மா காலனியில் மர்மக் காய்ச்சல் பீதி அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அட்வைஸ்

விருதுநகர், மார்ச் 21: விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்த ஒருவர் மர்மக் காய்ச்சலால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த நாகூர் ஹனீபா, சென்னையில் வியாபாரம் செய்து வருகிறார். இவர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், பர்மா காலனி மக்கள் டெங்கு அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், கொசு ஒழிப்பு  பணியாளர்களுடன் இணைந்து பர்மா காலனி பகுதியை நேற்று சுத்தம் செய்தனர். கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள எடுத்து வருகின்றனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல்  பாதிப்பால் கடந்த ஆண்டில் தமிழகத்தில் 16 பேர் இறந்தனர். இது அதற்கு  முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவு. இது குறித்து பொதுமக்கள் பீதியடைய  வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘சென்னையில் தற்போது மலேரியா பாதிப்பு இருப்பதால், ஹனீபாவுக்கு மலேரியாக காய்ச்சலாக இருக்கலாம். அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவு வந்தவுடன்தான் எதையும் கூற முடியும். பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், 48 மணி நேரத்திற்குள் டாக்டரை பார்க்க வேண்டும். தலைவலி, வயிற்றுவலி, உடல்சோர்வு இருந்தால் மருத்துவமனைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடவும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். தேங்காய் ஓடுகளில் தண்ணீர் இருந்தால், அதனை அகற்ற வேண்டும். சென்னையில் போரூர், மயிலாப்பூரில் காய்ச்சல் பாதிப்புள்ளது. 99 சதவீதம் பேருக்கு வருவது குணப்படுத்தும் காய்ச்சல்தான். ஒரு சதவீதம் பேருக்குத்தான் பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் வருகிறது. யாரும் பீதி அடைய வேண்டாம்.

டெங்குவை கண்டறியும் எலிசா பரிசோதனை உள்ளது. போதிய மருத்துவ வசதி உள்ளது. தடுப்பூசி தயாராக உள்ளது. கர்ப்பிணிகள், ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கழிவுப்பொருட்களை அகற்ற வேண்டும். கை கழுவும் பழக்கம் வேண்டும். உள்ளாட்சி துறை மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை விரைவு படுத்தப்படும்’ என்றனர்.

Related Stories: