ஆர்.கே.பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு ஊராட்சிக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிப்பட்டு, மார்ச் 21: ஆர்.கே.பேட்டையில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள்  காலி குடங்களுடன்சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார் குப்பம் ஊராட்சியில் காந்தி சாலை, காமராஜ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் பிரச்னை உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஊராட்சி மன்றத்தில் புகார் அளித்தும் குடிநீர் தட்டுப்பாட்டை சீர்படுத்த எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அம்மையார் குப்பம் பேருந்து நிலையம் அருகே காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆர்.கே. பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு  வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். போலீசாரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: