அக்கம்பாக்கம், செவிலிமேடு, தண்டலம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்வி சீர்

ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 21: ஸ்ரீபெரும்புதூர்ஒன்றியம் தண்டலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தண்டலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து  ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். தண்டலம் கிராம மக்கள் சார்பில், பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது. கிராம பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் ₹3.5 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு தேவையான லேப்டாப், பீரோ, ஒலிபெருக்கி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சில்வர் அண்டா, தட்டுகள், செம்பு, விளையாட்டு பொருட்கள், நாற்காலிகள், ஸ்மார்ட் கிளாஸ் பயிலுவதற்கு எல்இடி டிவி, நோட்டுப் புத்தகங்கள், கேரம் போர்டு, மின்விசிறிகள், டேபிள், சேர், சமையல் உபகரணங்கள், ஏர் கூலர், ஸ்டேஷனரி பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, தண்டலம் விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு சென்ற பொதுமக்கள், தலைமை ஆசிரியர் ஏலன் பிரியகுமாரியிடம் வழங்கினர். கல்வி மேலாண்மை குழு தலைவர் சுதா சசிகுமார், முன்னாள் தலைவர்கள் சிவகாமி வெங்கடேசன், ராணி சண்முகம், முன்னாள் துணை தலைவர் சசிகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் ரேவதி ரவி, அதிமுக அவை தலைவர் குமார், தண்டலம் ஊராட்சி செயலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து ₹ 5 லட்சம் மதிப்பில் கலர் டிவி, கணினி, இரும்பு பீரோ, குடிநீர் பாத்திரங்கள், நாற்காலிகள் உள்பட பல்வேறு பொருட்களை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, மேற்கண்ட பொருட்களை சீர்வரிசையாக கிராம மக்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, சிலம்பாட்டம் ஆடிவர பள்ளிக்கு வந்தனர். அங்கு, தலைமை ஆசிரியர் தணிகை அரசுவிடம், கல்வி சீரை வழங்கினார்கள். இதில் வட்டார கல்வி அலுவலர் சிவசங்கரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், பெற்றோர்கள் செங்குட்டுவன், பொன்னி, ஆசிரியர்கள் சேகர், சீனிவாசன், கலைவடிவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த விழாவில் அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் 10 குழந்தைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில் கணினி வழி கல்வியையும் துவக்கி வைத்து, பள்ளி மாணவர்கள் நடத்திய அறிவியல் கண்காட்சியும் கிராம மக்கள் கண்டு ரசித்தனர். இதேபோன்று, காஞ்சிபுரம் செவிலிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான ₹1 லட்சம் மதிப்பில் கம்ப்யூட்டர், மேஜை, நோட்டுப் புத்தகங்கள் உள்பட பலவகையான பொருள்கள், திறன் மேம்பாட்டுக்காகவும்,  விளையாட்டு மற்றும் கல்வி வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கினர். கிராம பொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு  வரை சீர்வரிசையோடு சென்று, தலைமை ஆசிரியர் ஆதிலட்சுமியிடம் வழங்கினர். இதில் கோட்டி வெங்கடேசன், சசிகலா கருணாகரன், காமகோட்டி உள்பட கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த அகரம்தூளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அகரம்தூளி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் தரத்தினை உயர்த்து வகையில் கல்வி தரத்தினை மேம்படுத்த கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர்.

இதைதொடர்ந்து, பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் அதற்கு தேவையான மென்பொருட்கள் உள்பட தளவாட பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், நாற்காலிகள், நோட்டு புத்தகங்கள், பீரோ, டிவி, டேபிள் உள்பட சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜனனி, ஆசிரியர் பயிற்றுனர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி ஆசிரியர்கள் தியாகராஜன், நவமணி ஆகியோர் வரவேற்றனர். இதையொட்டி  ஸ்மார்ட் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் முறைகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories: