உண்டியலூர் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா

ஏரல், மார்ச். 21: உண்டியலூர் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழன்) நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள உண்டியலூர் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி  கால்நாட்டு விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20ம் தேதி நேற்று இரவு 7 மணிக்கு அபிசேக தீபாராதனை, இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, இரவு 10 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக இசைப்பட்டிமன்றம் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய விழாவான பங்குனி உத்திர விழா இன்று (வியாழன்) நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், காலை 10.15 மணிக்கு கணபதி ஹோமம், பகல் 12.05 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு யாகம், மாலை 6 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பேச்சியம்மனுக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 7.30 மணிக்கு வில்லிசை, இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு படைப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 22ம் தேதி நாளை காலை 5 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குணமால், செயலாளர் ராமகிருஷ்ணமுத்து, பொருளாளர் முருகேசன், திருப்பணிக்குழு தலைவர் ரத்தினவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: