மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக 100 ேபர் போட்டியிடுவர் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

கும்பகோணம், மார்ச் 19: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக 100 வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வர் என்று தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கூறினார். கும்பகோணத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட 100 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வர். முதல்கட்டமாக கடந்த 11ம் தேதி 50 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கும்பகோணத்தில் இன்று (நேற்று) 10 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவோம். வரும் 20ம் தேதி மயிலாடுதுறையில் முதல்கட்டமாக 10 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதைதொடர்ந்து மீதமுள்ள 90 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வர்.

கெயில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். விளை நிலங்களில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலத்தை வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும். ஒவ்வொரு குடிமக்களுக்கும் அரசு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.6,000 வழங்க வேண்டும். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி நிறைவேற்றி தருவேன், இல்லாவிட்டால் ராஜினாமா செய்வேன் என்று ஏதாவது ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் உத்தரவாதம் கொடுத்தால் எங்களது இயக்க வேட்பாளர்களை வாபஸ் பெற செய்து விட்டு அந்த வேட்பாளரின் வெற்றிக்கு தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் பாடுபடுவோம் என்றார்.

Related Stories: