வீரராகவ பெருமாள் கோயிலில் மாசி அமாவாசை தெப்ப உற்சவம்

திருவள்ளூர், மார்ச் 7: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாசி அமாவாசை மற்றும் முதல் நாள் தெப்ப உற்சவத்தையொட்டி, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமாவாசைதோறும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று மாசி அமாவாசை மற்றும் முதல் நாள் தெப்ப உற்சவம் என்பதால், நேற்று முன்தினம் இரவே தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்தனர்.

இரவில் கோயில் நுழைவு வாயிலின் வெளியே சிமெண்ட் சாலையிலும், தங்கும் அறைகளிலும் படுத்து உறங்கினர். நேற்று காலை குளத்தில் நீராடி கோயிலுக்கு சென்று மூலவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து ஹருதாப நாசினி குளத்தில் மாசி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதில், உற்சவர் வீரராகவ பெருமாள் தேவி பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Related Stories: