பிரதமர் பங்கேற்கும் விழா அரங்கில் 6 அடி உயர தாமரை சின்னம்

கன்னியாகுமரி, பிப். 22: குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் என மொத்தம் ₹40 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள் துவக்க நிகழ்ச்சி வரும் மார்ச் 1ம் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.இதற்காக விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. விழா அரங்கில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேடையின் முன்பகுதியில் பாஜகவின் தாமரை பூ சின்னம் சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேடையில் அமரும் பிரதமர் உள்பட முக்கியஸ்தர்களுக்கும், பந்தலில் அமருகின்ற பொது மக்களுக்கும் நடுவில் முக்கிய இடத்தில் தாமரை பூ அமைக்கப்படுவதால் இந்த சின்னம் வடிவமைப்பு பணியில் பாஜக நிர்வாகிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.அதிமுக, பாஜ இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார தொடக்க விழாவாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விழா அரங்கில் இந்த சின்னம் வடிவமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: