தேசிய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

நாகர்கோவில், பிப்.20: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

2018-19ம் கல்வியாண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் பெறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கு $13,000 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

01.07.2017 முதல் 30.06.2018 முடியவுள்ள கால கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள் ஆவர். குழுப் போட்டிகளாயின் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டியாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in ல் பதிவேற்றி 12.03.2019 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தினை அலுவலக நாட்களில் தொடர்பு கொண்டு உரிய விளக்கத்தினை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: