வட்டிக்கு பணம் கொடுத்து வந்தவர் தற்கொலை செல்போனில் மிரட்டியதாக பெண் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு

காரைக்கால், பிப். 20: காரைக்காலில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தவர், மர்மநபர்களின் செல்போன் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆண், பெண் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடிவருகின்றனர். காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசாகுடி காமராஜ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாலை வீட்டில் யாருடனோ போனில் சப்தமாக பேசிகொண்டிருந்தவர், திடீரென வீட்டு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, வட்டி பணம் வசூல் செய்வதில் குறிப்பிட்ட சிலர் சுரேஷை செல்போனில் மிரட்டியதாகவும், அதனால்தான் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டதாகவும், இதன்பேரில் விசாரணை நடத்தவேண்டும் என, அவருடைய மனைவி சுதா, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரேஷை செல்போனில் மிரட்டிய மர்மநபர் குறித்து விசாரித்து வந்தனர். விசாரணையில், காரைக்காலை சேர்ந்த ஆனந்திசந்திரன் என்ற பெண்ணுக்கு சுரேஷ் ரூ.3 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அதை திருப்பி கேட்டதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், காவல் நிலையத்தில் நடந்த சமரசத்தில், பிப்ரவரி 28ம் தேதிக்குள் முதல் தொகையாக ரூ.1.25 லட்சத்தை ஆனந்திசந்திரன் திருப்பி தந்துவிடுவதாக உடன்பாடு ஏற்பட்டது. ஆனால்,  காரைக்காலை சேர்ந்த கணேஷ் மற்றும் சிலர் ஆனந்திசந்திரனுக்கு ஆதரவாகவும், பணத்தை தருவதில் மேலும் கால அவகாசம் கேட்டதாகவும், ஆனந்திசந்திரன், கணேஷ் மற்றும் சிலர் சுரேஷை இதுதொடர்பாக போனில் தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  இதனால்தான் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து, முதல்கட்டமாக கோட்டுச்சேரி போலீசார், கணேஷ் மற்றும் ஆனந்திசந்திரன் ஆகியோர் மீது பணம் தராமல் ஏமாற்றுதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடிவருகின்றனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: