தெக்கலூர் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பஸ் சிறை பிடிப்பு

அவிநாசி, பிப்.20:  அவிநாசி அடுத்த தெக்கலூரில் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதையடுத்து, இவ்வழியாக வந்து செல்லும் தனியார், அரசு பேருந்துகள், பேருந்து நிறுத்ததில் நிற்காமால் புறவழிச்சாலை மேம்பாலத்தின் மீது மட்டும் சென்று திரும்பி, மேம்பாலத்தின்மீது வருகின்றது. இதனால் பொதுமக்கள் பேருந்தை பிடிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் பயனில்லை. இந்தநிலையில் தெக்கலூர் செங்காளிபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி தங்கமணி (35) , தெக்கலூர் செல்வதற்காக  திருப்பூர் புஸ்பா ஸ்டாப்பில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கோவை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி தெக்கலூருக்கு பயணச் சீட்டு கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர், தெக்கலூர் நிற்காது எனக் கூறியதுடன் தங்கமணியை அவமதித்து கீழே இறக்கியும் விட்டுள்ளார். இது குறித்ததகவலை தனது கணவர் மற்றும்  உறவினர்களிடம்  உடனடியாக போன்மூலமாக தங்கமணி தெரியப்படுத்தியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து  தெக்கலூர் புறவழிச்சாலை மேம்பாலம் வழியாக கோவை சென்ற அந்த தனியார் பேருந்தை சிறைபிடித்து,  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், இனிமேல், தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திச் செல்வதாக அந்த தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: