பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2ம் நாளாக வேலை நிறுத்தம்

ஈரோடு, பிப். 20: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பிஎஸ்என்எல் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2ம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், தங்களது அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில், மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் மணிபாரதி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவி செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் தபால் துறை, போக்குவரத்து துறை, மின் வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளை சேர்ந்த ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 128 பிஎஸ்என்எல் அலுவலகங்களில் பணியாற்றும் 1,150 ஊழியர்களும் நேற்று 2ம் நாளாக பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும், லேண்ட் லைன், செல்போன் டவர் பிரச்னை, இண்டர் நெட் பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க வந்த வாடிக்கையாளர் பிஎஸ்என்எல் அலுவலகம் பூட்டப்பட்டு கிடப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சேவை மையமும் பூட்டப்பட்டிருந்தது.

Related Stories: