காதலர் தினத்தன்று கிருஷ்ணகிரி அணை பூங்கா வெறிச்சோடியது

கிருஷ்ணகிரி, பிப்.15: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வர். காதல் ஜோடியினர் சுற்றுலா தலங்களுக்கு சென்று நாள் முழுவதும் ஜாலியாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதியில் ஏராளமான காதல் ஜோடிகள் வருவார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமன்றி அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காதலர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவார்கள். அவ்வாறு வரும் காதலர்களில் சிலர் தனிமையில் ஒதுங்குவது வழக்கம். அதுபோல் தனிமையில் ஒதுங்கும் காதல் ஜோடிகளை உள்ளூரை சேர்ந்த சில ரவுடிகள் குடிபோதையில் போய் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டு விரட்டுவது போன்ற சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட கிருஷ்ணகிரி அணை பகுதியில் மாவட்ட எஸ்.பி பண்டிகங்காதர் உத்தரவின்படி சாதாரண உடையில் ஆண், பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வழக்கம் போல் அதிக அளவில் காதல் ஜோடிகள் வரவில்லை. ஒரு சில காதல் ஜோடிகள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும் பூங்காவில் உள்ள மரங்களின் அடியில் அமர்ந்திருந்தனர். சுற்றுலா பயணிகளோ, காதலர்கள் அமர்ந்துள்ள பகுதிக்கு அடிக்கடி சென்று வந்ததால், அவர்களும் சிறிது நேரத்திலேயே இடத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: