ஆக்ரோஷமான தொண்டர்களை அமைதி படுத்திய முதல்வர்

புதுச்சேரி, பிப். 14:  முதல்வர் போராட்டம் அறிந்து கவர்னர் மாளிகை முன் குவிந்த தொண்டர்களை அமைதிப்படுத்திய முதல்வர், அகிம்சை வழியில் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கவர்னர்  மாளிகை உள்ளே நுழைய முடியாதபடி நான்கு பக்கமும் பேரிகார்டர்கள் போட்டு  தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். நேரம், செல்ல, செல்ல தொண்டர்கள், பொதுமக்கள்  ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டு வந்தனர். இதில் காங்கிரஸ்  தொண்டர்கள் இடைவிடாது கிரண்பேடியே வெளியேறு என கோஷமிட்டு வருகின்றனர். சிலர்  தடுப்பு கட்டைகளை தாண்டி உள்ளே குதித்து ஓட முயன்றனர். அப்போது  போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை  சீரியசாவதை உணர்ந்த போலீசார், முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு  சென்றனர். பின்னர் நாராயணசாமி அங்கு சென்று, அமைதியான வழியில் போராட்டம்  நடத்தி வருகிறோம். எனவே இது போன்று நடந்து கொள்ளக்கூடாது. நம்முடைய  கோரிக்கை வெற்றி பெறும் வரை அமைதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்ய  வேண்டும். சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தினார். இதனை  தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியானார்கள்.

Advertising
Advertising

பறை அடித்து சங்கு ஊதி போராட்டம்: கவர்னருக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு தொண்டர்கள் கொண்டு சென்றுள்ளனர்.அதன்படி  நேற்று மாலை காங்கிரஸ் தொண்டர்கள் 30க்கும் மேற்பட்டோர் கவர்னரை கண்டித்து  பறை அடித்து, சங்கு ஊதி மணி அடித்து போராட்டம் நடத்தினர்.  கவர்னர் மாளிகையை சுற்றி அமைந்திருக்கும் சாலைகளில் சங்கு ஊதி, மணியடித்தபடி சுற்றி வருகின்றனர்.அராஜக  கவர்னரே, மக்களாட்சிக்கு எதிரானவரே வெளியே போவது எப்போது? என பாடல் பாடி  சங்கு ஊதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்ட களத்துக்கு வந்த சபாநாயகர்:இதற்கிடையே சபாநாயகர்  வைத்திலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை  நடத்தி சென்றார். போராட்டம் தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கவர்னர் மாளிகை  அருகே விளக்கு, சேர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. அமைச்சர்கள் தங்கள் அன்றாட பணிகள் பாதிக்கப்படக்கூடாது  என்பதற்காக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: