தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு கடனுதவி பெற்றுத்தருவதாக கூறி ₹13.87 லட்சம் மோசடி செய்த

திருவண்ணாமலை, பிப்.12: ₹13.87 லட்சம் மோசடி செய்த தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில், டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி கலெக்டர்) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறைதீர்வு கூட்டத்தில், முதியோர் உதவித்ெதாகை, இலவச வீட்டுமனை பட்டா, சுய உதவிக்குழு கடனுதவி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 640 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தினார். ேமலும் நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிலையில், திருவண்ணாமலை வானவில் நகரில் வசித்து வரும் திருநங்கைகள் 10க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை நகராட்சியில் மட்டும் 50 திருநங்கைகள் இருக்கிறோம். அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. பல வருடங்களாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து இலவச வீடும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் சமூகத்திற்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த முனியம்மாள் அளித்த மனுவில், திருவண்ணாமலை காந்தி நகர் 4வது தெருவில் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தை சேர்ந்த மோகன்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த 53 நபர்களிடம் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து கடனுதவி பெற்றுத்தருவதாக கூறி ₹13.87 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்கு எந்த கடனுதவியும் பெற்றுத்தரவில்லை. பின்னர் இதுகுறித்து விசாரித்த போது, மோகன்குமார் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. எனவே மோசடி செய்த தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.இதேபோல், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் மாத சீட்டு நடத்தி வந்த பிரேமா என்பவரிடம் எங்கள் கிராமத்தை சேர்ந்த 40 பேர் மாத சீட்டாக மாதம் ₹5 ஆயிரம் கட்டி வந்தோம். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரேமா பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். எனவே நாங்கள் செலுத்திய சுமார் 3 லட்சத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: