சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் வீணாக அலைக்கழிப்பு

விருதுநகர், பிப்.7: மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமிற்கு மருத்துவர்கள் சரிவர வருவதில்லை. தங்களை அலைக்கழிப்பதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.  தமிழகத்தில் 1.25 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு என அரசு மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காது, மூக்கு, தொண்டை, நரம்பியல், ஆர்த்தோ மற்றும் சைக்காலஜி மருத்துவர்கள் என ஒரே நேரத்தில் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் இதில் எந்த மருத்துவரும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. சிலர் முகாம்களுக்கு வருவதே இல்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்று விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் முகாம் நடப்பதாகவும், இதில் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படுவதாகவும் காலை 10 மணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குரிய மருத்துவர்கள் வரவே இல்லை. கடைசியாக மதியம் ஒரு மணியளவில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் வந்து சிகிச்சை அளித்து விட்டு சென்றார். இதனால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதுபோன்று தொடர்ச்சியாக நடப்பதால் இங்கு வந்து சிகிச்சை பெறக் கூடிய மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். தங்களது கை, கால்களை இழந்து பார்வையில் நிலை இழந்து வெகுதூரத்திலிருந்து வருகிறவர்களை அலைக்கழிக்க கூடாது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் நலச்சங்க செயலாளர் முத்து மணிகண்டன் கூறுகையில், ‘‘இதே மாதிரியாக மருத்துவர் வராமல் இருத்தலும் அல்லது தாமதமாக வருவதும் தொ டர்ந்து நடந்து கொ ண்டே வருகிறது. இது குறி த்து நாங்கள் புகார் அளித்தால் ஓரிரு வாரங்களுக்கு மருத்துவர்கள் வருவார்கள். அதன்பின் இது தொடர்கதையாகவே மாறிவிடும். எனவே இதற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். மருத்துவர்கள் சரியான முறையில் பணிக்கு வர வேண்டும். எங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories: