அருப்புக்கோட்டை, ஜன. 31: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், பரிசோதனை மட்டுமே செய்வதால், கண்சிகிச்சை பிரிவு களையிழந்து வருகிறது. பல லட்சக்கணக்கான ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடம் காய்ச்சல் பிரிவாக மாறி வருகிறது. அருப்புக்கோட்டையில் பந்தல்குடி ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. தேசிய தரச்சான்று பெற்ற இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, கண்சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. கண் சிகிச்சைக்கு என தனியாக ஒரு பிரிவு உள்ளது. இதில், 16 படுக்கைகள் மற்றும் பார்வை பரிசோதனை, கண்ணீர் அழுத்த பரிசோதனை, கண்ணீர் பை பரிசோதனை, கண் விழித்திரை பரிசோதனை, கண்புரை அறுவை சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் பொருத்துதல், பார்வை நிறமி பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளன. நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு இங்கு வந்து செல்கின்றனர். தினமும் 5க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.
