காரியாபட்டி அருகே ஆவியூரில் டாஸ்மாக் கடையை இடமாற்ற வலியுறுத்தல்

காரியாபட்டி, ஜன. 30: காரியாபட்டி அருகே, ஆவியூரில் உள்ள டாஸ்மாக் கடையால், இளைஞர்கள் பாதிக்கப்படுவதால், அந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘காரியாபட்டி அருகே, மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் ஆவியூர் கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசகுளம், குரண்டி, கீழஉப்பிலிக்குண்டு உள்ளிட்ட பல ஊர்கள் உள்ளன. ஆவியூரில் பெரும்பான்மையான இளைஞர்கள் கொத்தனார் வேலை செய்கின்றனர். இவர்கள் வேலை முடிந்து மாலை நேரங்களில், நான்குவழிச்சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் குடிக்கின்றனர். இதனால், அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, குடும்படும் பாதிக்கப்படுகிறது. மேலும், குடித்துவிட்டு சாலையை கடக்கும்போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், போலீசார் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு, குடித்தவர்களை மட்டுமல்லாமல், குடிக்காதவர்களையும் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். எனவே, ஆவியூரில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றி அமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: