வைகை ஆற்றில் ஓபிஎஸ் ஆசியோடு மணல் கொள்ளை?

 விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு

 குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

மதுரை, ஜன.23:  தமிழக துணை முதல்வர் ஆசியோடு வைகை ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் தீபாசங்கிரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.   கூட்டத்தில் விவசாயி ராமன் பேசும்போது, ‘‘வைகை ஆற்றுப்படுகையில், குருவித்துறை முதல் மேலக்கால் வரை மணல் அள்ளப்படுகிறது. இதில் துணை முதல்வர் ஆசியுடன், மணலை  மாபியா கும்பல் அள்ளிவருகிறது’’ என்றார். அப்போது, அதிமுகவை சேர்ந்த விவசாயிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு சத்தம் போட்டனர். இதையடுத்து விவசாயிகள், ‘‘பட்டா நிலத்தில் மண் அள்ள கனிமவளத்துறை அனுமதி பெற்று சுற்றியுள்ள நிலத்தில் மணல் அள்ளுகின்றனர். முறைகேட்டில் கனிமவளத்துறைக்கு அதிக பங்குண்டு. அவர்களுக்கு தெரியாமல் ஏதும் நடக்காது. முறைகேட்டிற்கு காரணமே அவர்கள்தான், தொடர்ந்து ஒரு கும்பல் மணல் அள்ளிக்கொண்டே உள்ளது’’ என்றனர்.  இதற்கு பதிலளித்து கலெக்டர் நடராஜன் பேசும்போது, ‘‘முறைகேடு தொடர்பாக புகார் வந்தால், விசாரித்து போலீசில் வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: