பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

சத்தியமங்கலம், ஜன.23:சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

திண்டுக்கல்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை வழியாக சரக்கு வாகனங்கள் செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி முதல் வரை 12 சக்கரங்கள் கொண்ட லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இரவில் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாததால் இரவில் வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டு காலையில் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பண்ணாரி வன சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்வதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டது. சாலையின் நடுவே கூண்டு அமைக்கப்பட்ட நிலையில் சாலை குறுகலாக இருந்ததால் கூண்டின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.  இதையடுத்து, சோதனைச்சாவடி பகுதியில் 50 மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.சாலை அகலப்படுத்தப்பட்ட பின் வேகத்தடை அமைக்கப்பட்டு பின்னர் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: