டி.கோவில்பட்டி, திருவேடகத்தில் அய்யனார், கருப்பணசாமி கோயில்களில் கும்பாபிஷேகம்

மேலூர்/சோழவந்தான், ஜன.22: மேலூர் அருகே டி.கோவில்பட்டியில் நூற்றாண்டை கடந்த பழமையான கானப்படை அய்யனார் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில்களில் கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுபகுதி கிராமமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் பழமைவாய்ந்த பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத பூபால அய்யனார் மற்றும் மந்தை கருப்பணசுவாமி கோயில்களில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தபின் கடங்கள் புறப்பாடாகி கோயிலை சுற்றி வலம் வந்தன.

சிவாச்சாரியார்கள் காலை 6.45 மணியளவில் மந்தை கருப்பணசுவாமி கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அடுத்து காலை 10 மணியளவில் பூபால அய்யனார் கோவில் கலசம் மற்றும் முன்பகுதியில் புதிதாக பிரதிஸ்டை செய்யப்பட்ட பிரமாண்டமான இரண்டு சேமங்குதிரை சிலைகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Related Stories: