கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

கோவை, ஜன.22: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சண்முக சுப்பிரமணிய சுவாமி தைப்பூச திருவிழா கடந்த 18ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. பின்னர் 19ம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் (20ம் தேதி) மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் பின்னர் யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது.

 இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு திருத்தேரோட்டம் துவங்கியது. இதை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரன், கோவை அறநிலைய துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், ஆய்வாளர் உமா மகேஸ்வரி, மற்றும் கோயில் செயல் அலுவலர்கள் சீனிவாசன், கைலாஷ், விஸ்வநாதன் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  உபயதாரர்கள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தேர் இழுத்தனர். தேர், ஈஸ்வரன் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, நாஸ் தியேட்டர் வழியாக டவுன்ஹாலை அடைந்து பெரிய கடை வீதி வழியாக மீண்டும் ஈஸ்வரன் கோயில் வீதியில் மதியம் 12.45 மணியளவில் கோயிலை அடைந்தது.

தேரோட்டத்தை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்ட வீதிகளில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, ஊர் காவல் படை ஆகியவற்றை சேர்ந்த 500க்கு மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் ஈடுபட்டனர். கேமரா பொருத்திய போலீஸ் வேனும், தீயணைப்பு வாகனமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. நிறைவாக, இன்று காலை 8 மணிக்கு தரிசனமும், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

Related Stories: