கடையம் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டு எரிப்பு

கடையம், ஜன. 18: கடையம் அருகே செட்டிமடம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் செட்டிமடம் பகுதியில் பல ஆண்டுகளாக ஊராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதில் பிளாஸ்டிக் குப்பைகளும் சேர்த்து எரிக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக தீவைத்து எரிக்கப்படும்போது வெளிவரும் புகை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி குடியிருப்பு பகுதிகளில்  காற்றில் பரவுகிறது. இதனால் எழில்நகர், வாசுகிரிநகர், நரையப்பபுரம், அங்கப்பபுரம் ஆகிய கிராம மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதோடு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.

குறிப்பாக புற்றுநோய் பாதிப்பும் உருவாகக் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரங்களில் குழந்தைகள் நிம்மதியாக தூங்க முடியாமல் இருமிக்கொண்டே அவதிப்படுகின்றனர். புகையால் அம்பை- தென்காசி சாலையில் வந்துசெல்லும் வாகனஓட்டிகளும் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகின்றனர். எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது தனிக்கவனம் செலுத்தி பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: