உரப்பயன்பாட்டை குறைக்க மண் பரிசோதனை அவசியம்

ஈரோடு, ஜன. 18: உரப்பயன்பாடு செலவினத்தை குறைக்கவும், மகசூல் அதிகரிக்கவும் விவசாயிகள் கண்டிப்பாக மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வேளாண் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயத்துக்கு அடிப்படை தேவைகளாக நிலவளம், நீர்வளம் அமைகின்றன. நிலத்தின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணின் ரசாயன குணங்களும், பயிருக்கு கிடைக்க கூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமாகவே அறிய முடியும். மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப சமச்சீர் உரத்தை பரிந்துரை செய்ய முடியும்.குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதோடு அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம். மண்ணின் தன்மைகளை கண்டறிய களர், உவர் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து அவற்றை சீர்திருத்தவும், பயிருக்கு கிடைக்ககூடிய சத்துக்களின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடவும் மண் பரிசோதனை அவசியமாகிறது. நிலத்தின் தன்மைக்கு ஏற்ப கரிசல் மண் பகுதி, செம்மண் பகுதி ஆகியவற்றுக்கு மண் மாதிரியை தனித்தனியாக எடுக்க வேண்டும். இதே போல வயலின் மேடான பகுதிக்கு தனியாகவும், தாழ்வான பகுதிக்கு தனியாகவும் மண் மாதிரி எடுக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்த பின்னர் நிலத்தை அடுத்த பயிருக்கு தயார் செய்வதற்கு முன்பு தற்போதுள்ள பயிருக்கு உரமிட்ட 3 மாதங்களுக்கு பிறகும் மாதிரி எடுக்க வேண்டும்.

எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரங்கள் நிழல் படரும் பகுதிகள், நீர் கசிவு உள்ள இடங்கள் உள்ளிட்ட இடங்களில் மண் மாதிரி எடுக்க கூடாது. மண் மாதிரியுடன் விவசாயி பெயர், முகவரி, நிலத்தின் பெயர், சர்வே எண், உர சிபாரிசு தேவைப்படும் பயிர் ரகம், மானாவரி அல்லது இறவை உள்ளிட்ட விபரங்களுடன் மாவட்ட மண் ஆய்வுக் கூடம் அல்லது நடமாடும் மண் ஆய்வு கூடத்திற்கு விவசாயிகள் அனுப்பி வைத்து பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Advertising
Advertising

Related Stories: