நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 11: பூதலூர் வட்டாரம் செங்கிப்பட்டி சரகம் பாலையப்பட்டி தெற்கு கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் நெல் சாகுபடி செய்துள்ள 25 விவசாயிகளை தேர்வு செய்து நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த வயல்வெளி பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை அலுவலர் கவிதா வரவேற்றார். பயிற்சியில் கோடை உழவு செய்தால் ஏற்படும் நன்மை, பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறை, விதைநேர்த்தி செய்வதன் அவசியம், உயிர் உரத்தை விதையில் கலந்து விதைப்பதால் ஏற்படும் நன்மை குறித்து கூறப்பட்டது.

மேலும் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த தெளிக்கபடும் பூச்சி மருந்தால் நெற்பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், பொறிவண்டு, தரைவண்டு, மிரிட் நாவாய் பூச்சி, வெட்டுகிளி, சிறுஅலை நாவாய் பூச்சி, நீர்மிதிப்பான், ஊசிதட்டான் ஆகியவை அழிந்து விடுவதால் உயிரியல் முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பூதலூர் வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்ய 200 விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம், நெல் விதை, உயிர் உரம், சிங்க் சல்பேட் போன்ற வேளாண் இடுபொருட்கள் வழங்கி செயல்விளக்க திடல் அமைக்கப்பட்டது.

வேளாண்மை துணை இயக்குனர் (ஓய்வு) கலைவாணன், வயல்களில் பூச்சி புலனாய்வு மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு தெரிவித்தார். ஏற்பாடுகளை செங்கிப்பட்டி உதவி வேளாண்மை அலுவலர் கருணாநிதி, அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் புனிதா அபிராமி செய்திருந்தனர்.

Related Stories: