வில்லியனூர் அருகே காங்., என்ஆர் காங்., மோதல்

வில்லியனூர், ஜன. 8: வில்லியனூர் அருகே பேனர் வைத்ததில் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (60). காங்கிரஸ் எம்எல்ஏவின் உறவினரான இவர், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகில் இவரும் இவரது மகன் தனுஷ்கோடியும் சேர்ந்து கடந்த 31ம் தேதி பேனர் வைத்துள்ளனர்.சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வந்த தனுஷ்கோடி பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மோகன்ராஜ் (21) என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். பதிலுக்கு மோகன்ராஜும் தனுஷ்கோடியை தாக்கியதாக கூறப்படுகிறது.இரண்டு பேருக்கும் ஆதரவாக அவர்களது கட்சிகளை சேர்ந்தவர்களும், நண்பர்களும் திரண்டு தகராறில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக வில்லியனூர் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் ஏட்டு குப்புசாமி அளித்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த தனுஷ்கோடி (31), தமிழ்வாணன் (33), கலைவாணன் (60), மோகன்ராஜ் (21), தீபன் (20), சரத் (20) ஆகிய 6 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மோகன்ராஜை தாக்கிய தனுஷ்கோடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வில்லியனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: