ஒரகடம் அருகே தந்தையுடன் தூங்கியபோது பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுவன் 24 மணி நேரத்தில் அம்பத்தூரில் மீட்பு

 அடுத்தடுத்து துரித நடவடிக்கை எடுத்த போலீசார்  வெள்ளை உடை முதியவருக்கு வலை

பெரும்புதூர், ஜன.4: பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுவனை, தனிப்படை போலீசார் அம்பத்தூரில் மீட்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான வெள்ளை உடை முதியவரை வலைவீசி தேடி வருகின்றனர். 24 மணிநேரத்தில் போலீசார்,  நடவடிக்கை எடுத்ததால், உயர் அதிகாரிகள் பாராட்டினர்.பெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த சேந்தமங்கலம் கிராமம், பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரபிரசாத். கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு குமரகுரு (5) என்ற மகன் இருக்கிறான்.

நேற்று காலை சிறுவன் குமரகுரு, தந்தையிடம் வெளியே அழைத்து செல்லும்படி கேட்டான். இதையடுத்து குமரபிரசாத், தனது பைக்கில் வல்லக்கோட்டைக்கு புறப்பட்டார். ஒரகடம் அருகே சுமார் 11 மணியளவில் சென்றபோது,  அவருக்கு மதுகுடிக்க ஆசை வந்தது.

டாஸ்மாக் கடை 12 மணிக்கு திறப்பதால், அங்குள்ள மரத்தின் கீழ் மகனுடன் படுத்து கொண்டார். சிறிது நேரம் கழித்து எழுந்த சிறுவன், சிறுநீர் கழிப்பதாக கூறினான். தூக்க கலக்கத்தில் இருந்த அவர், சென்று வரும்படி  கூறிவிட்டு, மீண்டும் தூங்கிவிட்டார்.

இதையடுத்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின், எழுந்த குமரபிரசாத், மகனை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. பின்னர், டாஸ்மாக் கடைக்கு சென்ற அவர், போதை  தலைக்கேறியதும், மகன் காணாமல் போனதை நினைத்து கதறி அழுதார்.

இதுகுறித்து ஒரகடம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, வெள்ளை உடை அணிந்த முதியவர், சிறுவனை  அழைத்து சென்றது பதிவாகி இருந்தது.இதைதொடர்ந்து, பெரும்புதூர் ஏஎஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையில் 4 இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த கேமராவில் பதிவான காட்சியில் ஒரகடம் நேக்கி சென்ற ஷோ்  ஆட்டோவில் சிறுவனை அழைத்து சென்றது தெரிந்தது.உடனே ஒரகடம் சென்ற தனிப்படையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, நேரத்தை கணக்கிட்டனர். அதன்படி அந்த முதியவர், ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கி அம்பத்தூர் செல்லும் பஸ்சில்,  ஏறியது தெரியவந்தது.

பின்னர் தனிப்படை போலீசார், அம்பத்தூர் பகுதிக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களுக்கும் விரைந்து சென்று, அந்த பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது, கடைசியாக அம்பத்தூருக்கு சிறுவனை கடத்தி சென்றது  பதிவாகி இருந்தது.

தொடர்ந்து போலீசார், அந்த பகுதி முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தியதில், அங்குள்ள ஒரு வீட்டில் சிறுவன் மட்டும் தனியாக இருப்பது தெரிந்தது. அங்கு வேறு யாரும் இல்லை. இதையடுத்து போலீசார், சிறுவனை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், சிறுவனை கடத்திய முதியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.சிறுவன் மாயமான 24 மணி நேரத்தில், ஏஎஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி கண்டுபிடித்து மீட்டதற்கு, காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: