கைதான மருமகன், கூட்டாளி ஜாமீன் மனு தள்ளுபடி

புதுச்சேரி, ஜன. 3:  புதுவை லாஸ்பேட்டை அசோக்நகர் அம்பேத்கர் சாலையை சேர்ந்த செந்தில்முருகன் மகன் விஷ்ணுபிரசாத் (20). கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை விற்பதற்காக ஆன்லைனில் மொபைல் ஆப் மூலம் விளம்பரம் செய்தார். அந்த காரை விலைக்கு வாங்கி கொள்ள 2 பேர் சம்மதம் தெரிவித்து கேண்டீன் வீதியில் உள்ள வீட்டுக்கு காரை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதன்பேரில், காரை விஷ்ணுபிரசாத் அந்த இடத்திற்கு கொண்டு சென்றபோது, அவரது முகத்தில் மிளகு பொடியை ஸ்பிரே செய்து காரை கடத்திச் சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் காரை உப்பளம் ரோட்டில் மடக்கி பிடித்தனர். விசாரணையில் புதுவை கேண்டீன் வீதியை சேர்ந்த லாசர் மகன் எட்வின் (26), உடனிருந்தவர் முதலியார்பேட்டை ராமலிங்கம் வீதியை சேர்ந்த பெருமாள் மகன் கிரிதரன் (19) என தெரியவந்தது. எட்வின் மீது முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது. ெசாத்து பிரச்னையால் தனது மாமாவான, ஓய்வுபெற்ற துணை கலெக்டர் ராஜசுந்தரத்தை காரை மோதி விட்டு கத்தியால் குத்திக் கொல்வதற்காக காரை கடத்தி சென்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் எட்வின், கூட்டாளி கிரிதரன் ஆகியோர் ஜாமீன் கேட்டு புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனு நேற்று, நீதிபதி கிருஷ்ணசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. கொலை செய்யும் நோக்குடன் காரை கடத்தி சென்றதால் ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரவீன்குமார் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி, 2 பேரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: