கும்பகோணம் கோட்டத்தில் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கும்பகோணம், டிச. 19: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அஞ்சலக கோட்டத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று துவங்கினர். இதைதொடர்ந்து கும்பகோணம் தலைமை தபால் நிலைய வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் சுவாமிநாதன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணி நிறைவு பலன்களும் 1.1.2016 முதல் பணி நிறைவு பெற்ற அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும். மேலும் நிலுவைத்தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான குழு காப்பீட்டு சந்தாவை மாதம் ரூ.500 ஆக மாற்றி குழு காப்பீட்டு தொகையின் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக மாற்ற வேண்டும். விருப்ப ஓய்வில் செல்லும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்யக்கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கும்பகோணம் அஞ்சலக கோட்டத்துக்கு உட்பட்ட குத்தாலம், குடவாசல், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் உள்ள 153 கிளை தபால் நிலையங்களை சேர்ந்த 350 ஊழியர்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் காலவரையற்ற  வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. தலைவர் குடியரசன், கவுரவ தலைவர் மோகன்,  செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொருளாளர் கருப்பையன் பங்கேற்றனர். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: