நியமன எம்எல்ஏக்கள்- 100 பேர் கைது

புதுச்சேரி, டிச. 18:   புதுவையில் ராகுல்காந்தியை கண்டித்து நியமன எம்எல்ஏக்கள் உள்பட பாஜகவை சேர்ந்த 100 பேரை பெரியகடை போலீசார் பாதியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.ரபேல் போர் விமான தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை  பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, சங்கர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் பாலாஜி தியேட்டர் சந்திப்பில் திரண்டனர்.

அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு ராகுல்காந்திக்கு எதிராக கோஷமிட்டபடி வைசியாள் வீதியிலுள்ள மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை கொசக்கடை வீதி- அண்ணா சாலை சந்திப்பில் கிழக்கு எஸ்பி மாறன் மேற்பார்வையில் பெரியகடை இன்ஸ்பெக்டர் மோகன்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 3 நியமன எம்எல்ஏக்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: