கழிவுநீர் குட்டையாக மாறிய அரசு தொடக்கப்பள்ளி வளாகம்

புதுச்சேரி,  டிச. 14: புதுவை ஒட்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர்  தேங்கி கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளதால் மாணவர்கள் பரிதவிக்கும் நிலையில்  உள்ளனர்.புதுவை, வில்லியனூர், ஒட்டம்பாளையம் ரோடு, பாப்பாஞ்சாவடியில்  அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி  பயில்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கடந்த கஜா புயலின்போது பெய்த மழையால்  தேங்கிய மழைநீர் அங்கு குட்டையாக தேங்கியுள்ளது.தற்போது வரை அந்த நீர்  வடியாததால் துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ள கழிவுநீரில் இறங்கி  குழந்தைகள் அங்குள்ள கழிவறைக்கு செல்ல வேண்டிய அவலம் உள்ளது. மேலும் கல்வி  பயிலும்போது மாணவர்கள் கொசுக் கடியால் அவதிப்படுவதோடு, வைரஸ் காய்ச்சல்  உள்ளிட்ட நோய்களின் தாக்குதலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக  குழந்தைகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

 அவர்களும்  இப்பிரச்னையை கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளின்  கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்  குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி  உள்ளனர்.

 இந்த அவலத்தை கண்டித்து ஓரிரு நாளில் அனைத்து  பெற்றோர்களையும், மாணவர் அமைப்புகளையும் திரட்டி பள்ளி முன்பு  போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: