மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்கு பாத்திகளில் நாற்று நடவு பணி இம்மாத இறுதியில் துவக்க திட்டம்

ஊட்டி,டிச.11: மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக பாத்திகளில் நாற்று நடவு பணிகளை இம்மாதம இறுதியில் துவக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.  

 ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தாவரவியல் பூங்காவை பார்ப்பதற்காகவே வருகின்றனர். இதுமட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சியின் போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். கடந்த ஆண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. மலர் கண்காட்சி தினத்தன்று அந்த தொட்டிகள் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். மலர்கண்காட்சிக்கு பல ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்படும் நிலையில், இவைகளின் வளர்ச்சி காலத்தை பொறுத்து விதை விதைக்கும் பணிகள் துவங்கும். ஆண்டு தோறும் அக்டோபர் முதல் விதைகள் சேகரிக்கப்பட்டு, நவம்பரில் நர்சரிகளில் விதைக்கும் பணி துவக்கப்படும்.  

6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளான பெகோனியா, ரெகன்கிளாசம், வால்சம், சோலியாஸ், லிசியந்தால், சால்வியா மற்றும் டென்பீணம் ஆகிய வகைகளை சேர்ந்த மலர் நாற்றுக்கள் ஓரிரு நாட்களில் தயார் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்பீனியம், சால்வியா, ஹெர்மினா, ஹோலிஆக், வென்டர் ஹைனஸ் ஆகிய மலர் செடிகளின்ல நாற்றுக்கள் இத்தாலியன் பூங்கா அருகேயுள்ள நர்சரியில் நாற்றுக்கள் தயார் ஆகி வருகின்றன. தற்போது நாற்றுகள் தயாரான நிலையில் இம்மாதம் இறுதி வாரத்தில் நாற்று நடவு பணி துவக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டகலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆண்டு தோறும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக மலர் செடிகளை தயார் செய்யும் பணி டிசம்பர் மாதத்தில் துவங்கும். 4 முதல் 6 மாதங்கள் வரை வளரும் மலர் செடிகளின் விதைகள் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நாற்றுக்களாக வளர்ந்துள்ளன. மலர் தொட்டிகள் மற்றும் பாத்திகளில் நடவு செய்யும் பணிகள் இம்மாதம் இறுதி வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

Related Stories: