மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை டிச.7: விருதுநகர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும்.  அதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தென்கோடியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க  கடந்த 2011ம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதற்கான சர்வே முடிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு நில ஆர்ஜித பணி நடந்து வருகிறது. போதிய நிதி இல்லாததால் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இத்திட்டத்திற்கு மாநில அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அருப்புக்கோட்டை வட்டார ரயில் பயணிப்போர் நலச்சங்க தலைவர் மனோகரன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘‘மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி அகல ரயில்பாதை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் தென்பகுதியில் அமைந்துள்ள 8 தாலுகா மக்கள் பயன்பெறுவர்.  மேலும் புதிய ரயில் தடத்தில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் தொடங்கி பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே  இந்த புதிய ரயில் பாதை பணியை விரைவில் முடித்து ரயில் போக்குவரத்து துவங்க மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் நில ஆர்ஜிதத்திற்கு தேவையான நிதியை தமிழக அரசு வருவாய்த்துறை ஒதுக்கித் தரவேண்டும்’’ என கோரியுள்ளார்.

Related Stories: